Friday, November 27, 2009

வறுமை ஒழிப்பு

பூனைக்கு மெத்தையான
தன் வீட்டு அடுப்புக்கு
சுள்ளிகள் கிடைக்குமென்ற
நம்பிக்கையோடு
விடியற்காலையிலேயே வந்து
கடை விரித்தான்
இருளாண்டிக்கிழவன்.

நடராசர்களின் பாதவரம் வேண்டி
கையில் குத்தூசியோடு
தன் கண்களைப்
பாதையில் விதைத்திருந்த
அந்தக்
காலணி மருத்துவனின்
காலைத் தவத்தைக்
கலைத்தது "போலீஸ் லத்தி".

யோவ் பெரிசு
"மந்திரி"
சாயங்காலம் இங்க
வறுமை ஒழிக்கிறதப்பத்தி
கூட்டத்தில பேசப்போறார்.
அதுக்கு மேடை போடனும்
நீ இப்பவே
எடத்த காலி பன்னு.

Friday, September 19, 2008

குழந்தை தொழிலாளர்கள்


ஒரு சாதாரண மூங்கில்
புல்லாங்குழல் ஆவதற்கு
தன் முதுகில் சூட்டை தாங்கி
ஓட்டை போட்டுக்கொள்ளலாம்.
ஆனால்
விறகு இல்லை என்று கூறி
மூங்கிலையே விறகாக்கும்
சமூகத்தை என்னவென்று சொல்வது?

Tuesday, September 16, 2008

வறுமை

நம் நாட்டிலுள்ள
கட்சிக்கொடிகள் மட்டும்
அறுந்தால் போதுமே….!
அதுமறைக்கும் நாட்டில்
பலரது நிர்வாணத்தை.

சக்தி

சில மனிதர்களின் சந்திப்பு
சந்திக்காத போதும் சிலர் பேச்சு
படிக்கும் வாக்கியத்தில் சில வரிகள்
நிதர்சனமாய் நெஞ்சை உருக்கும் நிகழ்வுகள்
துரோகத்தால் பாதித்த இனம்
தனிமையில் உலவும் மனம்
இவை யாவும்
எந்த ஒரு மனிதனையும்
எப்படி வேண்டுமானாலும் 
மாற்றும்
சக்தி படைத்தவை.

சுதந்திரம்



சுதந்திரம் என்பது….
சிறகோடு இருப்பது மட்டுமல்ல!
கூண்டில் அடைபடாமலும் இருப்பதே.